திருச்சி – யாழ்ப்பாணம் இடையே மீண்டும் விமானப் போக்குவரத்து ஆரம்பம் - Global Tamil Voice உலக தமிழ் குரல்

திருச்சி – யாழ்ப்பாணம் இடையே மீண்டும் விமானப் போக்குவரத்து ஆரம்பம்



திருச்சி விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இண்டிகோ (IndiGo) விமான நிறுவனம் சார்பில் இந்த விமான சேவை ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஏற்கனவே விமான சேவைகள் இடம்பெற்று வருகின்றன. இதனிடையே, திருச்சி – யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவையும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கப்பட்டிருந்தது. எனினும், பின்னர் ஏற்பட்ட தொழில்நுட்ப காரணங்களால் அந்த சேவை இடைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இண்டிகோ நிறுவனம் சார்பில் திருச்சி – யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

வாரத்தில் 3 நாட்கள் விமான சேவை

புதிய அட்டவணைப்படி, செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வாரத்திற்கு மூன்று நாட்கள் இந்த விமான சேவை இயக்கப்படுகிறது.

திருச்சி விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானம் சுமார் 45 முதல் 50 நிமிடங்களில் யாழ்ப்பாணத்தைச் சென்றடையக்கூடியதாக தெரிவிக்கப்படுகிறது.

விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்ட முதல் நாளான ஒக்டோபர் 1ஆம் திகதி, யாழ்ப்பாணத்திலிருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் 45 பயணிகளும், திருச்சியில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற விமானத்தில் 44 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.

திருச்சி – யாழ்ப்பாணம் இடையே மீண்டும் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை இரு பகுதிகளுக்கும் இடையிலான பயணத்தை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளமை குறித்து பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

About GTV